முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தரம் III – மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை 2026
Management Service Officers’ Service – Grade III
அரச சேவையில் பணிபுரியும் தகுதியுடைய உத்தியோகத்தர்களிடமிருந்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை – 2026 தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
📌 முக்கிய தகவல்கள்
- பதவி: முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் – தரம் III
- பரீட்சை வகை: மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை
- பரீட்சை நடைபெறும் காலம்: டிசம்பர் 2026
- Online விண்ணப்பங்கள் ஆரம்பம்: 31.08.2026 – காலை 9.00 மணி
- விண்ணப்ப இறுதித் திகதி: 25.09.2026 – இரவு 9.00 மணி
- பரீட்சைக் கட்டணம்: ரூ. 600/-
- விண்ணப்ப முறை: Online மூலம் மட்டுமே.
👥 யார் விண்ணப்பிக்கலாம்?
இந்த மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு பொதுமக்கள் நேரடியாக விண்ணப்பிக்க முடியாது.
பின்வரும் அரச உத்தியோகத்தர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்:
- அரச சேவையில் நிரந்தர நியமனம் பெற்றிருத்தல்;
- அந்த நியமனத்தில் நிரந்தரமாக்கப்பட்டிருத்தல்;
- அரச நிர்வாக சுற்றறிக்கை 10/2025 இன் கீழ் Primary Level – PL சம்பளக் குறியீட்டின் கீழ் சம்பளம் பெறுபவர்கள்; அல்லது
- MN 1-2025 சம்பளக் குறியீட்டின் கீழ் சம்பளம் பெறுபவர்கள்.
⚠️ முக்கிய தகுதி நிபந்தனைகள்
தற்காலிக அல்லது Casual அடிப்படையில் பணிபுரியும் அரச ஊழியர்கள் இந்தப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியாது.
மேலும், குறிப்பிட்ட பணிக்காக விசேட பயிற்சி பெற்ற அல்லது அரைத் தொழில்நுட்ப பணிகளில் ஈடுபடும் சில ஊழியர்களும் இப்பரீட்சைக்கு தகுதியற்றவர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர். உதாரணமாக, பொறியியல்/தொழிற்சாலை சார்ந்த சில பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையின் குறிப்பிட்ட பணியாளர்கள் இதில் அடங்குவர். தமது தகுதி தொடர்பில் சந்தேகம் இருப்பின், தமது திணைக்களத் தலைவரின் ஊடாக உரிய அதிகாரியிடம் விசாரிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர் குறித்த உத்தியோகத்தரை விடுவிப்பதற்கு உடன்பட வேண்டும்.
💰 சம்பளம்
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தரம் III பதவிக்கான மாதாந்த சம்பள அளவு:
ரூ. 48,470 – 82,800/-
MN 2-2025 சம்பளக் குறியீட்டின் கீழ் இந்த சம்பள அளவு வழங்கப்படும். தகுதியைப் பெற்று நியமனம் பெறும் விண்ணப்பதாரர்களுக்கு இந்த சம்பளம் 01.01.2027 முதல் பொருந்தும். அரச ஊழியர்களுக்கான ஏனைய கொடுப்பனவுகளும் விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்படும்.
🏛️ நியமன நிபந்தனைகள்
- நியமனம் நிரந்தரமானது.
- ஓய்வூதிய உரிமை உண்டு.
- நியமனத்திலிருந்து ஒரு வருட பரீட்சார்த்த காலம் இருக்கும்.
- முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தரம் III-க்கு இணைந்த பின்னர் 3 வருடங்களுக்குள் சேவைப் பிரமாணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முதலாவது வினைத்திறன் காண் தடைப் பரீட்சையில் (Efficiency Bar Examination) சித்தியடைய வேண்டும்.
- நியமனம் செய்யப்பட்ட பின்னர் இலங்கையின் எந்தப் பகுதிக்கும் இடமாற்றம் அல்லது நியமனம் செய்யப்படலாம்.
- நியமிக்கப்பட்ட சேவை நிலையத்தில் பொதுவாக குறைந்தது 3 வருடங்கள் சேவை செய்ய வேண்டும். விசேட காரணங்களின் அடிப்படையில் அதற்கு முன்னர் இடமாற்றம் செய்வதற்கான அதிகாரம் நியமன அதிகாரிக்கு உண்டு.
- நியமனம் பெற்றவர்கள் அரச கரும மொழித் தேர்ச்சி தொடர்பான விதிமுறைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
📝 பரீட்சைப் பாடங்கள்
மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை இரண்டு வினாத்தாள்களைக் கொண்டது.
01. மொழித் திறன் மற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை தகைமைப் பரீட்சை
- மொத்த மதிப்பெண்கள்: 100
- சித்தியடைய வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண்: 40
- காலம்: 2½ மணி நேரம்
இந்த வினாத்தாளில்:
- வாசிப்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன்
- கருத்துக்களை தெளிவாக வெளிப்படுத்துதல்
- எழுத்துப் பிழை/எழுத்தமைப்பு
- மொழி மற்றும் கட்டுரை
- வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கடிதம் தயாரித்தல்
- ஒரு பத்தியை சுருக்கமாக எழுதுதல்
- பல வாக்கியங்களின் கருத்தை ஒரு வாக்கியமாக எழுதுதல்
- வழங்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அட்டவணை/வரைபடம் தயாரித்தல்
- அடிப்படை இலக்கணம்
- அலுவலக ஆவணங்களை கையாளும் அடிப்படை நடைமுறைகள்
- முகாமைத்துவ சேவை உத்தியோகத்தரின் கடமைகள்
- அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் பதிவேடுகள், Voucher, Movement Sheet, Attendance Register, Date Stamp, Seal, Name Stamp, Mail Bag போன்றவற்றின் பயன்பாடு
ஆகிய விடயங்கள் தொடர்பான கேள்விகள் இடம்பெறும்.
இந்த வினாத்தாள் இரண்டு பகுதிகளாக அமையும்:
பகுதி I – மொழித் திறன்
- 50 மதிப்பெண்கள்
- 1 மணி 15 நிமிடங்கள்
பகுதி II – முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை தகைமை
- 50 மதிப்பெண்கள்
- 1 மணி 15 நிமிடங்கள்.
02. Aptitude / அபியோக்யதா பரீட்சை
- மொத்த மதிப்பெண்கள்: 100
- சித்தியடைய வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண்: 40
- காலம்: 1 மணி நேரம்
- வினாக்கள்: 50
இந்த வினாத்தாள் விண்ணப்பதாரர்களின்:
- எண்ணியல் திறன்
- தர்க்க சிந்தனை
- பொதுப் புத்திக்கூர்மை
ஆகியவற்றை மதிப்பிடும் வகையில் அமையும். பல்தேர்வு மற்றும் குறுகிய விடை வினாக்கள் இடம்பெறும். அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும்.
🎯 தேர்வு செய்யப்படும் முறை
ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் பெற வேண்டும்.
மேலும், நியமனத்திற்குத் தெரிவு செய்யப்படுவதற்கு எழுத்துப் பரீட்சையின் மொத்த மதிப்பெண்களில் குறைந்தபட்சம் 50% பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பிட்ட குறைந்தபட்ச மதிப்பெண்ணைப் பெற்ற அனைவரும் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட மாட்டார்கள்.
கிடைக்கப்பெறும் வெற்றிடங்களின் அடிப்படையில், எழுத்துப் பரீட்சையில் பெற்ற தகுதி வரிசை (Merit Order) அடிப்படையில், வெற்றிடங்களின் எண்ணிக்கையுடன் தொடர்புடைய குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவர்.
🌐 பரீட்சை மொழி
பரீட்சை:
- சிங்களம்
- தமிழ்
- ஆங்கிலம்
ஆகிய மொழிகளில் நடைபெறும்.
விண்ணப்பதாரர் தமக்கு விருப்பமான ஒரு மொழி ஊடகத்தை தெரிவுசெய்து பரீட்சை எழுதலாம். இரண்டு வினாத்தாள்களுக்கும் ஒரே மொழியில் பதிலளிக்க வேண்டும். Online விண்ணப்பம் ஆங்கிலத்தில் மட்டுமே பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
🏫 பரீட்சை நடைபெறும் நகரங்கள்
பரீட்சை பின்வரும் நகரங்களில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது:
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, குருநாகல், புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி மற்றும் கேகாலை.
போதுமான விண்ணப்பதாரர்கள் இல்லாத காரணத்தால் ஏதேனும் பரீட்சை நிலையம் இரத்து செய்யப்பட்டால், வேறு நிலையத்திற்கு மாற்றுவதற்கான அதிகாரம் பரீட்சை ஆணையாளர் நாயகத்திடம் உள்ளது.
💳 பரீட்சைக் கட்டணம்
பரீட்சைக் கட்டணம் – ரூ. 600/-
கட்டணத்தை:
- எந்தவொரு வங்கி Credit Card மூலமாகவும்
- எந்தவொரு வங்கி Debit Card மூலமாகவும்
- Bank of Ceylon Online Banking / Flex App மூலமாகவும்
- Bank of Ceylon கிளையில் Teller Slip மூலம்
செலுத்த முடியும்.
செலுத்தப்பட்ட பரீட்சைக் கட்டணம் எந்தக் காரணத்திற்காகவும் மீளச் செலுத்தப்படாது.
⚠️ முக்கிய அறிவுறுத்தல்கள்
விண்ணப்பதாரர்கள் தமது தகுதிகளை உறுதிப்படுத்திய பின்னரே விண்ணப்பிக்க வேண்டும். தவறான அல்லது பொய்யான தகவல்களை வழங்கியிருப்பது கண்டறியப்பட்டால், விண்ணப்பம்/தேர்வு வாய்ப்பு இரத்து செய்யப்படுவதுடன், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.
2026.08.31 காலை 9.00 மணி முதல் 2026.09.25 இரவு 9.00 மணி வரை Online விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
📢 அரச சேவையில் நிரந்தரமாகப் பணியாற்றும் தகுதியுடைய உத்தியோகத்தர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் விண்ணப்பித்து, முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தரம் III பதவியைப் பெறுவதற்குத் தயாராகுங்கள்.
| MSO பரீட்சை வழிகாட்டல் வட்ஸ்அப் குழுவில் இணைய | Click here |