மாணவர்களுக்கான வீட்டுத் தோட்டப் போட்டி
Home Garden Competition for Students
தமிழ் தேசியப் பசுமை இயக்கம் நடாத்தும் மாணவர்களுக்கான வீட்டுத்தோட்டப் போட்டியுடன், செயன்முறை வழிகாட்டல் கருத்தமர்வும், விதைப்பொதிகள் விநியோகமும்!
போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள், சிறந்த செய்கையாளர்களுக்கு விசேட பரிசுகள்!
நடாத்துவோர்:
திரு. பொ.ஐங்கரநேசன்
(தலைவர் – தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம்)
திரு. பொ.அற்புதச்சந்திரன்
(ஓய்வு நிலை பிரதி விவசாய பணிப்பாளர்)
கலாநிதி எஸ்.ஜே அரசகேசரி
(விவசாய விஞ்ஞானி)
இடம்: இளங்கலைஞர் மன்றம், சட்டநாதர் வீதி, நல்லூர்.
காலம்: 03.09.2022, சனிக்கிழமை, காலை 9.30
முன் பதிவுகளுக்கு: 0741471759 / 0777969644
வீட்டுத் தோட்டம் அமைத்தலும் அதன் அனுகூலங்களும்
வீட்டுத் தோட்டம் செய்வது மிகவும் பயனுள்ள ஒரு பொழுதுபோக்காகும். மன அழுத்தத்தைக் குறைப்பதாகவும், புத்துணர்வை ஏற்படுத்துவதாகவும் இது அமைகிறது. நீண்ட காலம் பலன் தரக்கூடியது. தோட்டம் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் எங்களுக்கு இடமில்லையே என்று கவலை கொள்ள வேண்டியதில்லை. தொட்டிகளிலும், போத்தல்களிலும் வைத்துக்கூட தோட்டம் செய்யலாம்.
இவ் வீட்டுத்தோட்டமானது, சுவையான, போசணைமிக்க, இரசாயனத்தன்மையற்ற காய்கறிகளை உற்பத்தி செய்வது மட்டுமல்ல, பழைய பொருட்களை மீள்சுழற்சி செய்யக்கூடியதாகவும் காணப்படுகின்றது.
இவ்வாறு வீட்டுத் தோட்டம் செய்வதன் மூலம் நாம் பல பயன்களைப் பெற்றுக் கொள்ள முடியும். சுத்தமான, சுகாதாரமான உணவைப் பெறல், விரும்பிய நமக்கு ஏற்ற உணவு வகைகளைப் பயிரிடல், ஈடுபாடு, உடலுக்கு நல்லதொரு உடற்பயிற்சி போன்றவை வீட்டுத்தோட்டத்தில் இருந்து எமக்குக் கிடைக்கும் பயன்களாகும்.
வீட்டுத்தோட்டத்தில் இரசாயன உரங்களையும், பூச்சி மருந்துகளையும் தவிர்ப்பது நலம். அதற்குப் பதிலாக, கசப்புத்தன்மையுடைய இலைகளை வேகவைத்து, சாறு எடுத்து, அதில் கோமியம் அதே அளவு கலந்து ஒரு லிட்டருக்கு 10 லிட்டர் தண்ணீர் சேர்த்து அடிக்கலாம். இது தீங்கு விளைவிக்கும் பூச்சிகள், பீடைகளிலிருந்து எமது தோட்டத்தைப் பாதுகாக்கும்.
உங்கள் வீட்டுத்தோட்டத்தில் வளருகின்ற காய்கறிகள் இயற்கையானது. நச்சுத்தன்மையற்றது. ஏனைய பொழுதுபோக்குகளை விட வீட்டுத் தோட்டம் அமைப்பது பயனுள்ளது. ஆகவே முயற்சி செய்தால், இதில் நாமும் வெற்றி பெற முடியும். சராசரியாக தினமும் 300 கிராம் காய்கறிகளை நமது உணவில் சேர்த்துக் கொண்டால், ஆரோக்கியமாக வாழலாம்.
இது ஒரு வகையில் மன ஆறுதல், இன்பம், நிம்மதி, நுகர்ச்சி என்பவற்றை நம் மனதில் ஏற்படுத்தும். நாம் பயிரிட்ட ஒரு பயிர் அதன் விளைச்சலைத் தருகின்ற போது, எமது மனதில் ஒரு புதுவித ஆனந்தம் எழும். காய்கறிகளை நடும் இடைவெளியை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
வீட்டுத் தோட்டம் அமைப்பதன் மூலம், நம் அன்றாட தேவைக்கான காய்கறிகள், கீரைகள், பழங்களை நாமே உற்பத்தி செய்து கொள்ளலாம்.
இன்று வீட்டுத்தோட்டங்களில், பல வகையான பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் இரசாயன உரங்களைப் பயன்படுத்துகிறோம். இது நல்லதல்ல. பீடைநாசினி, இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தல் போன்றவற்றைத் தவிர்ப்பதால், நாம் எவ்வித நோய்களுக்கும் உள்ளாக மாட்டோம். இது எமக்கு ஆரோக்கியமான, நீண்ட ஆயுளைப் பெற்றுத் தரும்.
தினமும் காய்கறிகளை நமது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறான ஒரு தோட்டத்தை நம்மால் அமைத்துக்கொள்ள இது தான் மிகச் சிறந்த நேரமாகும்.
வெண்டை, மிளகாய், கத்திரி, தக்காளி, பாகல், அவரை போன்ற காய்கறிகளை நட்டால் நாம் கடைகளில் வாங்க வேண்டியது இல்லை. நாம் உற்பத்தி செய்யும் காய்கறி, கீரை வகைகளை நாமும் உண்ணலாம். மற்றவர்களுக்கும் அதனை விற்று இலாபம் பெற முடியும்.
நடும் போது, முதலில் கொஞ்சம் வெயில் படும் இடமாகத் தெரிவு செய்யுங்கள். வீணாக நேரத்தைச் செலவிடாது, எம்மால் முடிந்த சிறியதொரு வீட்டுத் தோட்டத்தை செய்வோம்.
தோட்டம் அமைப்பது என்பது ஒரு வித அழகிய கலையாகும். அது எல்லோருக்கும் எளிதில் வந்துவிடாது. வீட்டுத்தோட்டம் எளிமையாகவும் சுலபமாகவும் எமது தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகின்றது.
எமது நாடுகளில் மட்டுமன்றி வளர்ந்த நாடுகளிலும் வீட்டுத்தோட்டம் அமைத்தல் என்பது மிகச்சிறந்த பொழுதுபோக்காகக் காணப்படுகிறது. நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் எவ்வளவு இரசாயனங்கள் கலந்திருக்கின்றன என்பது எமக்கே தெரியாது. ஆனால் எமது வீட்டுத் தோட்டத்தை நாமே அமைத்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமாக உண்ணலாம்.
பூச்சித் தொல்லை இருப்பின் வேப்பெண்ணெய், பஞ்சகவ்யா தெளிக்கலாம். தேவைப்பட்டால் கடலைப் பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு கலந்து இட முடியும். அடியுரமாக நன்கு மக்கிய கூட்டெரு உரங்களை (இயற்கை உரம்) இடுங்கள். எமக்குத் தேவையானவற்றை நாமே உற்பத்தி செய்கின்ற சுய தேவைப் பொருளாதார முறை தருகின்ற சந்தோஷத்தை வேறு எதனாலும் தந்து விட முடியாது.
சவாலான பொருளாதார நெருக்கடிகள், பஞ்சம் மற்றும் பட்டினி என்பன ஏற்படும் காலங்களில் இவற்றை சமாளிக்க வீட்டுத்தோட்டம் உதவியாக அமையும். அடுத்த பருவத்திற்கு அவற்றில் ஒரு காயை விதைக்கு விட்டு எடுத்துக் கொள்ளலாம்.
இயற்கையான முறையில் வீட்டுத்தோட்டம் அமைப்பதனால், இயற்கை முறையில், சக்தி நிறைந்த காய்கறிகளை நாமே விளைவித்துக் கொள்ளலாம். வீட்டுத் தோட்டத்தின் அனுகூலங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். வீட்டுத்தோட்டம் செய்வதனை அரசு தற்போது ஊக்குவித்துக் கொண்டே வருகிறது.
இதன் மூலம் நாமும் எமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டு, அதனை மற்றவர்களுக்கும் விற்று இலாபமும் ஈட்ட முடியும். மிகக் குறைந்த விலையில் எமது வீட்டுத் தோட்டத்தை நாமே உருவாக்கிக் கொள்ளலாம். முதலில் அதற்கான திட்டத்தை வகுங்கள்.
வீட்டுத் தோட்டம் செய்யும் போது நாம் சந்தோஷம் மற்றும் மன நிறைவைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆகவே நீங்கள் உங்கள் வீட்டுத் தோட்டத்தை இன்னும் தொடங்கவில்லை என்றால் இப்பொழுதே ஆரம்பியுங்கள்.