பரீட்சைக்குத் தயாராவது எப்படி? சிறப்பான 7 டிப்ஸ்!
நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்து அன்றாட நிகழ்வுகளையும் ஒரு புறம் சிந்தித்துப் பாருங்கள். எல்லாவற்றிலும் ஓர் ஒழுங்குமுறை ஒழிந்து காணப்படும். எமது பாடசாலைகள் மற்றும் அலுவலகங்களில் பல ஒழுங்கு முறைகள் பின்பற்றப்படுகின்றன.
ஏன் இயற்கையின் செயல்களை நன்கு உற்றுக் கவனித்தால் கூட, அந்த ஒழுங்கினை நன்கு காணலாம். ஆகவே, இதே ஒழுங்கினை நாங்கள் படிப்பதிலும் பயன்படுத்தினால், எமது பரீட்சையை இலகுவாக வெற்றி கொள்ளலாம்.
பரீட்சை நெருங்குகின்ற போது பெரும்பாலானோர் பதற்றத்துடன் காணப்படுவார்கள். எல்லோருக்கும் எழுகின்ற பொதுவான கேள்வி, எப்படிப் படிப்பது, எவ்வாறு பரீட்சைக்குத் தயாராவது என்பனவாகும்.
இவ்வாறான கேள்விகளுக்குப் பின்னால் பல்வேறு உளவியல் காரணங்கள் இருந்தாலும், அதனை வெற்றி கொள்வது இலகுவானது. இனி, பரீட்சையை வெற்றி கொள்ளும் சில முக்கிய டிப்ஸ்களைப் பார்ப்போம்.
01. திட்டமிடுங்கள்!
முதலில் எதனைக் கற்பது, எப்படிக் கற்பது, எந்த இடத்தில் கற்பது போன்ற விடயங்களை நன்கு திட்டமிட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் கற்கும் இடத்தை வெளிச்சமானதாக ஆக்கிக் கொள்ளுங்கள்.
கதிரை, மேசை போதுமான அளவு வசதியாக அமைந்திருக்கிறதா என்பதைக் கருத்திற் கொள்ளுங்கள். மேசை மீது உங்கள் புத்தகங்கள், கொப்பிகளை பரப்ப இடமிருக்கிறதா என்பதைப் பாருங்கள். உங்களது கற்றலை அமைதியான சூழலில் இருந்து ஆரம்பியுங்கள்.
02. சுய கற்றலுக்கான நேரத்தை ஒதுக்குங்கள்.
இன்று பெரும்பாலான மாணவர்கள் பாடசாலைக்கும், டியூஷன் வகுப்புகளுக்கும் மாத்திரமே நேரத்தை அதிகம் செலவிடுகிறார்கள். பலர் சுய கற்றலுக்கு நேரத்தை ஒதுக்குவதே கிடையாது.
முதலில் அனைத்து மாணவர்களும் விளங்கிக் கொள்ள வேண்டியது சுய கற்றல் தான் பரீட்சையை வெற்றி கொள்ள முக்கிய வழியாகும். சுய கற்றலில் ஈடுபடுபவர்கள் தான் அதிகம் ஜெயிக்கிறார்கள் என்பதை உங்கள் மனதில் நிலை நிறுத்துங்கள்.
03. உங்கள் விடைகளை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.
பிறருடன் உங்களுடைய விடைகளை ஒப்பிடுவதன் மூலமாகவும், கலந்துரையாடுவதன் மூலமாகவும் உங்களுக்கு நன்கு தெளிவான விளக்கம் கிடைக்கும். அத்துடன், நாம் படித்தவற்றை பிறருடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் நமது மனதிலும் அவை ஆழமாகப் பதியும் .
04. கடந்த கால வினாத்தாள்களை அதிகம் செய்யுங்கள்.
கடந்த கால வினாத்தாள்களைச் செய்வது, எமது பரீட்சை வினாத்தாளை இலகுவாக்கும். கடந்த கால வினாத்தாள்களின் வடிவமைப்பு, வினாக்களின் கட்டமைப்பு மற்றும் வினாத்தாள் ஒப்பீடு பற்றி நாம் அறிவதனால் எதிர்பார்க்கை வினாக்களைக் கூட எம்மால் தயார் செய்ய முடியுமாக இருக்கும்.
ஆகவே கடந்த கால வினாத்தாள்களை அதிகம் செய்யுங்கள். இவற்றைச் செய்வதன் மூலம், நேரத்தை உங்களால் இலகுவாக முகாமைத்துவம் செய்ய முடியுமானதாக இருக்கும்.
05. போதியளவு ஓய்வெடுங்கள்.
நம்மில் பலர் பரீட்சை நெருங்கி விட்டால், தூக்கம் இல்லாமல், உண்ணாமல், யாருடனும் பேசாமல் தொடர்ந்து படித்துக் கொண்டே இருப்பர். இது ஒரு தவறான செயற்பாடாகும். ஏனெனில், நமது மூளையானது குறிப்பிட்ட நேரமே (அண்ணளவாக 40 நிமிடங்கள்) சிறப்பாக இயங்கக் கூடியது .
இதனால்தான் பாடசாலைகளிலும் 40 நிமிடங்களுக்கு ஒரு முறை பாட வேளைகள் மாற்றப்படுகின்றன. ஆகவே, நாம் ஒரு பாடத்தைக் கற்ற பின்னர், சிறிது நேரம் நமது மூளைக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம், மேலும் பல புதிய விடயங்களை எமது மூளை இலகுவாக உள்வாங்கிக் கொள்ளும்.
06. போஷாக்கான உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.
போஷாக்கான உணவு கற்கும் மாணவர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். ஆகவே படிக்கின்ற பொழுது உணவு சாப்பிடுவதை தவிர்த்தும் விடாதீர்கள், மறந்தும் விடாதீர்கள். காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை அதிகம் உண்ணுங்கள். வல்லாரை, தேன், பசும்பால் போன்றன நமது நினைவாற்றலை நன்கு பெருக்கக் கூடியன.
அத்துடன், அதிகம் தண்ணீர் அருந்துவது நமது நினைவற்றலை அதிகரிப்பதாக விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகவே, எப்போதும் தண்ணீர் போத்தல் ஒன்றை உங்கள் அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.
07. பரீட்சைக்குரிய நாளைத் திட்டமிடுங்கள்.
இன்று முதல், பரீட்சை நடைபெறும் வரை உள்ள தினங்களைக் கணக்கிட்டு அதற்கேற்ப உங்கள் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். எப்போது எதனைச் செய்ய வேண்டும் என்பதைத் திட்டமிட்டு செயல்படுங்கள்.
இத்தனை விடயங்களையும் நீங்கள் பின்பற்றுகின்ற போது, நிச்சயம் உங்களால் பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும். பரீட்சை பற்றிய பயம் உளவியல் சார்ந்ததே. ஆகவே, இதனைத் திட்டமிட்டு செயல்படுத்துவதன், மூலம் எந்தப் பரீட்சையையும் உங்களால் இலகுவாக வெற்றி கொண்டு விட முடியும்.
BY: GK IQ MASTER
Join WhatsApp Group | Click here |