வெளிநாட்டில் வேலை வாய்ப்புத் தேடுவோருக்கான சில அறிவுரைகள்!
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையைக் கருத்திற் கொண்டு பல சகோதர, சகோதரிகள் வெளிநாடுகளை நோக்கிப் புறப்படுவதிலே மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.
தற்போது இலங்கை அரசினால் பல்வேறு நாடுகளுக்கும் இளைஞர், யுவதிகளை வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு அனுப்புவதற்கான செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், மலேசியாவுக்கு சுமார் 10,000 பேர், கொரியாவுக்கு 5000 பேர் மற்றும் ஜப்பான், மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.
இது தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வந்திருந்த போதிலும், உத்தியோபூர்வமான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இது பற்றி அறிந்து கொண்ட சில போலியான முகவர் நிலையங்கள் தற்போது வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைத் தேடிச் செல்லும் இளைஞர்களை ஏமாற்றி, பணம் கொள்ளையடிக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளன. இன்னும் பலர் குறித்த வேலைக்குச் சென்று, அந்த நாட்டிலேயே நிர்க்கதி நிலைகளுக்குக் கூடத் தள்ளப்படுகின்றனர். ஆகவே பிழையான தரப்புகள் மற்றும் போலியான முகவர்களிடம் சிக்கிக் கொள்ளாமல் கவனமாக இருங்கள்.
அண்மைக் காலங்களில் விசிட் விசா, ப்ரீ விசா, டூரிஸ்ட் விசா என்று பலர் வெளிநாடுகளில் ஏமாற்றப்பட்டமை அறிந்த விடயமே. ஆகவே இது தொடர்பில் எப்போதும் விழிப்பாக இருங்கள்.
மேலும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தொடர்பில் முழுத் தகவல்களையும் அறிய, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் இணையத்தளத்தைப் பார்வையிடுங்கள்.
மேலும் வெளிநாட்டு வேலை வாய்ப்புத் தகவல்கள் தொடர்பில், SLBFE ஐ தொடர்பு கொள்ள 0112864241 அல்லது 1989 ஐ அழைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
நீங்கள் முகவர் நிறுவனங்கள் ஊடாக வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்ல முயற்சிக்கின்றீர்கள் என்றால், முதலில் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் SLBFE இல் பதிவு செய்யப்பட்டுள்ளதா மற்றும் பணம் கொடுப்பதற்கு முன்னர் அவை செல்லுபடியான நிறுவனங்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
அத்துடன், தொழில் வாய்ப்புகள் குறித்த தகவல்களை நேரடியாக வழங்காது, வேறு இணைப்புகள் மூலம் தொடர்பு கொள்ளச் சொல்லும் பதிவுகள் தொடர்பில் மிகுந்த அவதானமாக இருங்கள்.
உங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு கூறி, உங்களுடைய தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி, வங்கிக் கணக்கு இலக்கங்களைக் கேட்கும் குற்றவியல் தரப்பினர் பற்றி அதிக எச்சரிக்கையுடன் இருங்கள்.
வேலை வாய்ப்பு விளம்பரங்களைப் பார்த்தவுடன், உடனடியாக நம்பாமல். அதனைப் பற்றி பல இடங்களிலும் ஆராய்ந்து விசாரித்து நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். ஆர்வக்கோளாறில் ஆராய்ந்து பார்க்காமல், பணம், பாஸ்போர்ட் மற்றும் மற்றைய ஆவணங்களை எவரிடமும் கொடுத்து விடாதீர்கள். நீங்கள் போகின்ற முகவர் நம்பகமானவரா, நம்பிக்கைக்குரியவரானவரா என்பதைப் பலமுறை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.
வெளிநாடுகளுக்கு தொழில் பெற்றுச் செல்பவர்கள், தாம் செய்து கொள்ளும் ஒப்பந்தத்தின் பிரதியை உங்கள் வீட்டிலும், மற்றையதை உங்கள் கையிலும் எப்போதும் வைத்திருங்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் நீங்கள் பணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டினை பாதுகாப்பாக வைத்திருங்கள்.
மேலும் உங்களது சேவைக்காகவே பணியகங்களும் தூதரகங்களும் உள்ளன. எனவே முகவர்கள், தொழில் தருனர்கள், தூதரகங்கள் மற்றும் பணியகங்களால் உங்களுக்கு ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டால், சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
ஆகவே, வெளிநாட்டு வேலை வாய்ப்புத் தேடுபவர்கள் எல்லாவற்றையும் சட்டரீதியாகவே செய்து வாருங்கள். நிச்சயம் அது உங்களை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் காப்பாற்றும். ஆழம் அறிந்து காலை விடுங்கள்.
– மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்