நமது ஞாபக சக்தியை அதிகரித்துக் கொண்டு கற்பது எவ்வாறு?
(சிறந்த ஏழு வழிமுறைகள்)
நான் மிகவும் மோசமான நினைவாற்றலைக் கொண்டவன். மற்றவர்களுடன் ஒப்பிடும்போது எனது ஞாபக சக்தி மிகவும் குறைவு. எனக்குப் படிப்பது ஒன்றும் ஞாபகத்தில் நிற்பதே இல்லை. இது போன்ற சிந்தனைகள் உங்களிடம் இருந்தால் இந்தக் கட்டுரையை முழுமையாக வாசியுங்கள்.
முதலில், நீங்கள் ஒரு அறிவியல் பூர்வமான உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு மனிதனுக்கும் குறைவான ஞாபக சக்தி, கூடுதலான ஞாபக சக்தி என்று இல்லை. ஒவ்வொருவரும் தமது செயற்பாடுகளை எப்படிச் செய்கிறார்கள் என்பதிலேயே அவர்களுடைய ஞாபக சக்தி தங்கியிருக்கிறது . நமது ஞாபக சக்தியை அதிகரிக்க சில வழிமுறைகளைச் செய்தாலே போதும். கற்கின்ற விடயங்களை எப்படி ஞாபகம் வைத்துக் கொள்வது என்பதை இலகுவாகக் கற்றுக் கொள்ளலாம்.
01. பகுதி பகுதியாகக் கற்றல்.
ஒரு பாடத்தைப் படிக்கும் போது, அதனைப் பல பிரிவுகளாகப் பிரித்துப் படித்தால், எம்மால் ஒவ்வொன்றையும் இலகுவாக ஞாபகம் வைத்துக் கொள்ள முடியும். ஒவ்வொரு பிரிவுக்கும் இடையில் சிறு ஓய்வை எடுத்துக் கொண்டு, சிறிது நேரம் கழித்துப் படியுங்கள். ஒரே பாடத்தை ஒட்டுமொத்தமாகப் படித்தால், நினைவில் வைத்துக் கொள்வது கடினமாகும்.
உடனடித் தேவைகளுக்கு மாத்திரம் முழுமையாகப் படிக்கலாம். ஆனால் இது நீண்ட காலத்திற்கு நம் மனதில் நிலைத்து நிற்காது. ஆனால், இடைவெளி விட்டுப் படித்தால், அவை நீண்ட காலத்திற்கு நமது ஞாபகத்தில் இருக்கும்.
02. ஒப்பித்தல் முறை
நாம் படித்தவற்றை தொடர்ந்து பார்க்காமல், அவற்றை மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்க்க வேண்டும். இப்படிச் செய்கின்ற போது பிழைகள் காணப்பட்டால், நாங்கள் அவற்றை இலகுவாகத் திருத்திக் கொள்ளலாம். அதே நேரம், கடினமான பகுதிகளுக்குத் தனித்தனியாகக் கவனம் செலுத்திப் படிக்க முடியும். ஒரு பாடம் முழுமையாகப் புரிந்த பின்னரே, அடுத்த பாடத்திற்குச் செல்ல வேண்டும்.
03. நினைவுக் குறிப்புகள்
நாம் கற்கின்ற ஒரு விடயத்தை நம் வாழ்வின் ஏதேனும் ஒரு செயலோடு ஒப்பிட்டுப் படிக்க வேண்டும். உதாரணமாக, ஒரு பொருளையோ அல்லது நிகழ்வையோ அல்லது வேறு ஏதேனும் ஒன்றையோ அதனுடன் தொடர்புபடுத்திக் கற்பது எமது நினைவாற்றலை மேலும் அதிகரிக்கச் செய்யும்.
04. சுவர்களில் காட்சிப்படுத்தல்
நாம் கற்கின்ற சில முக்கியமான விடயங்களை எமது அறையில் உள்ள சுவற்றில் எழுதி ஒட்டி வைத்துக் கொள்ளலாம். ஆகவே அவை தொடர்ச்சியாக எமது கண்களில் படுவதனால், எமது மனதில் அவை ஆழமாகப் பதியும்.
05. குறிப்புகள் எடுத்தல்
வீட்டில் படிக்கும் போதும், வகுப்பில் ஆசிரியர் பாடம் நடாத்தும் போதும் குறிப்புகள் எடுப்பது மிக மிக அவசியமாகும். கற்றல் அல்லது கற்பித்தலின் போது மிக முக்கியமாகக் கருதும் ஒவ்வொரு விடயங்களையும் நாம் சுருக்கமாக எமது கொப்பியில் எழுதி வைத்துக் கொள்ளல் வேண்டும்.
06. கலந்துரையாடுதல்
நாம் கற்ற விடயங்களை எமது நண்பர்களுடன் கலந்துரையாடுதல் மிகவும் அனுகூலமானது. எமக்குத் தெரிந்தவற்றை அவர்களுடனும், அவர்களுக்குத் தெரிந்தவற்றை எம்முடனும் பகிர்வதன் மூலம் கற்றல் விடயங்கள் இலகுவாக எமது மனதில் பதியும். அத்துடன் நமது நண்பர்களுக்குள்ளே, இது தொடர்பில் போட்டி நிகழ்ச்சிகளையும் நடாத்தலாம்.
07. பரீட்சை வைத்தல்
பரீட்சைகள் எழுதுவதற்கு முன்னர், நாம் கற்ற விடயங்களில் இருந்து, எமக்கு நாமே பரீட்சை வைத்து, அதனை எழுதிப் பழகுதல் வேண்டும். வினாக்களை நாமே உருவாக்கி, விடைகளை எழுதுவது எமது ஞாபக சக்தியை மேலும் மேம்படுத்தும்.
கற்பதற்கென தனியான நேரம் கிடையாது. எல்லா நேரங்களும் சிறந்தவையே. ஆயினும், அதிகாலையில் கற்பதென்பது, எமது நினைவாற்றலை மேலும் அதிகரிக்க உதவும். அதாவது, ஒரு நாள் தொடர்ச்சியாக நாம் இயங்கி விட்டுப் பின்னர், சற்றுத் தூங்கி எழுந்து அதிகாலையிலே கற்பது எமக்குப் புத்துணர்ச்சியைத் தருவதுடன், மூளை இலகுவாக எல்லா விடயங்களையும் சேமித்துக் கொள்ள உதவும்.
ஞாபக சக்தி குறைபாடுகளுக்கு நாம் சரியான உணவுகளை உண்ணாததும் ஒரு காரணமாகும். ஆகவே ஞாபக சக்தியை அதிகரிக்கவும், எமது மூளையை சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்ளவும் சரியான உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டு வந்தால், எமது நினைவாற்றல் மேம்படுவதுடன் உடல் ஆரோக்கியமும் பேணப்படும்.
கற்கின்ற மாணவர்கள் தமது ஞாபக சக்தியை அதிகரித்துக் கொள்ள, கீரை வகைகள் மற்றும் காய்கறிகளை அதிகம் உணவில் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். குறிப்பாக வல்லாரை, பாதாம் பருப்பு, முட்டை, தேன், பசும்பால் உற்பத்திப் பொருட்கள் நம் ஞாபக சக்தியை அதிகரிக்க கூடியன. அதிகம் தண்ணீர் அருந்துவதும் ஞாபக சக்தியை அதிகரிப்பதாக விஞ்ஞான ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
அத்துடன், ஒரு பாடத்தைக் கற்கச் செல்லும் முன், மாணவர்கள் தங்களது உள்ளங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ளல் வேண்டும். பிரச்சினைகள், மன அழுத்தங்கள் போன்றவை எமது ஞாபக சக்தியை குறைக்கக்கூடியன. ஆகவே இறை தியானங்களை மேற்கொள்வது எமது உள்ளங்களை ஒரு நிலைப்படுத்தும்.
மாலை நேரங்களில் அல்லது எமக்கு நேரம் கிடைக்கின்ற வேளைகளில் கடற்கரைகள், இயற்கைக் காட்சிகள், வயல்வெளிகள் போன்றவற்றைப் பார்ப்பது எமது மனதை ஆனந்தமடையச் செய்யும். உலக ஆசைகள் எதுவும் உள்ளங்களில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
நினைவு என்பது நம்மிடம் உள்ள ஒரு தனிச்சிறப்பாகும். மேலுள்ள வழிகளைச் சரியாகச் செய்கின்ற போது, நாம் கற்கின்ற விடயங்கள் எமது மனதில் பசு மரத்தாணி போல ஆழமாகப் பதியும்.