Interest Free Student Loan Scheme (IFSLS) for Higher Studies – 2025 (Tamil Details)

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு

வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் (09 ஆவது உள்ளீர்ப்புக்கான விண்ணப்பம் கோரல்)

2021/2022/2023 ஆகிய ஆண்டுகளில் க.பொ.த (உயர்தர) பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கானது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மாணவர் கடன் பிரிவானது, இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடத்தப்படும் க.பொ.த (உயர்தர) பரீட்சையில் சித்தியடைந்த இலங்கை மாணவர்களுக்கான வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தை (IFSLS) செயல்படுத்துகிறது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களால் நடாத்தப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டப்படிப்புகளைப் பின்பற்ற மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

எவ்வாறு விண்ணப்பிப்பது

தகுதியான விண்ணப்பதாரிகள் www. studentloans.mohe.gov.lk எனும் இணையதளம் ஊடாக நிகழ்நிலையில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

பட்டக் கற்கைநெறிகள்

சகல பட்டக் கற்கைநெறிகளும் ஆங்கிலத்திலேயே மேற்கொள்ளப்படுவதுடன், www. studentloans,mohe.gov.lk இணையத்தளத்தில் உள்ள மாணவர் கையேட்டின் மூலம் குறிப்பிட்ட பட்ட கற்கைநெறிகளை அணுக முடியும்.

விண்ணப்பம் சமர்ப்பிக்கும் காலம்:

அரம்ப திகதி: 2025.01.22

முடிவுத் திகதி, 2025.02.22

தகைமை

(i) 2021/2022/2023 ஆண்டுகளில் பரீட்சையில் அனுமதிக்கப்பட்ட பாடங்கள் 3 இல் குறைந்த பட்சம் மூன்று அமர்வுகளுக்கு மேற்படாமல் சாதாரண சித்தி (S) 3 இனை குறைந்த பட்சம் ஒரே அமர்வில் பெற்றிருகக வேண்டும் மற்றும்

(ii) மேலே (i) குறிப்பிடப்பட்ட ஏதாவதொரு அமர்வில் பொது ஆங்கிலப் பரீட்சையில் 30 க்கும் குறையாத புள்ளிகளைப் பெற்றிருத்தல் மற்றும்

(iii) க.பொ.த (உயர்தர) பரீட்சையில் பொது ஆங்கிலத்தில் சாதாரண (S) சித்தி அல்லது க.பொ.த சாதாரண தரத்தில் ஆங்கிலத்தில் சாதாரண (S) சித்தி மற்றும்

(iv) விண்ணப்பதாரிகளின் வயது 2025.02.22 ஆம் திகதியன்று 25 அல்லது அதற்கு மேற்படாமல் இருக்க வேண்டும்.

ஏனைய தகைமைகள்

பட்டக் கற்கைநெறிக்கான ஏனைய நுழைவுத் தகைமைகளைத் தெரிந்து கொள்ள www.studentloans.mohe.gov.lk எனும் இணையத் தளத்தில் மாணவர் கையேட்டைப் பார்வையிடவும்.

தேர்ந்தெடுப்பதற்கான வரைமுறைகள்

குறித்த பட்டக் கற்கைநெறிக்கு கீழ் வரும் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு உள்ளீர்ப்பு நடைபெறும்.

i. விண்ணப்பதாரி கொண்டிருக்க வேண்டிய ஆகக் குறைந்த தகைமைகள்

ii. பட்டக் கற்கைநெறிக்கான விண்ணப்பதாரியினால் குறிப்பிடப்பட்ட விருப்புத் தேர்வுகள்

iii. குறிப்பிட்ட அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவகத்தால் அந்தந்தத் துறைகளுக்காக ஒதுக்கப்படும் ஆசனங்களின் எண்ணிக்கை

iv. குறித்த துறைகளுக்கு அரச சார்பற்ற கல்வி நிறுவனங்களால் ஒதுக்கப்பட்ட ஆசனங்களிலும் பார்க்க கிடைக்கப்பெற்ற விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கை அதிகமாய் இருக்கும் பட்சத்தில் விண்ணப்பதாரிகள் க.பொ.த உயர் தரப் பரீட்சையில் பெற்ற Z பெறுமானம் கருத்தில் கொள்ளப்படும்.

அதி கூடிய கடன் தொகை ரூபா 1,500,000.00

பட்டப்படிப்பு கற்கைக்காக வழங்கப்படும் உச்சக் கடன் வரம்புகளை தெரிந்து கொள்ள www.studentloans.mohe.gov.lk என்ற இணையத் தளத்திற்கு பிரவேசித்து மாணவர் கையேட்டை பரீட்சிக்கவும். அந்தக் கடன் வரம்பின் கீழ், அந்தக் கற்கையை முழுமையாகக் கற்று  முடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இது தவிர மாணவரின் விருப்பு அடிப்படையில் ஆண்டுக்கு ரூபா 75,000 புலமைப்பரிசில் கடனை வட்டி இன்றி பெற்றுக்கொள்ள முடியும்.

கடனை வழங்கல்

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சினால் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் கடன் பெறுவதற்குத் தகுதி இருப்பதாக வங்கிக்கு பரிந்துரைக்கப்படுவதோடு, மாணவர் தமது கடன் விண்ணப்பத்தை பிணையாளர்கள் இருவருடன் குறித்த வங்கிக்குச் சமர்ப்பித்தல் வேண்டும். பிணையாளர்கள் இருவரில் முதல் பிணையாளராக தாய்  / தந்தை அல்லது பொறுப்பாளர் என்பதோடு இரண்டாவது பிணையாளர் வங்கியினால் கோரப்படும் வருவாயை கொண்டவராக இருத்தல் வேண்டும்.

மாணவர்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சினால் பரிந்துரைக்கும் வகையில் அரையாண்டு அடிப்படையில் கற்கை கட்டணத்திற்காக கொடுப்பனவு வழங்கப்படும்.

மாணவர்களின் பொறுப்பு

வட்டியில்லா கடன் திட்டத்தின் கீழ் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களும் கற்கைநெறியின் அனைத்து கட்டாய பாடத்துக்கும் குறைந்த பட்சம் திறமை சித்தி ஒன்றை (C) பாடநெறிக் காலத்தினுள் பெறவேண்டும் என்பதோடு, அவர்களது கல்விக் காலத்தில் 80% வருகையை பேண வேண்டும்.

கடனை மீளச் செலுத்தும் முறை

மொத்தக் கடன் காலமானது 12 வருடங்களாகும். இதற்கான முழு வட்டித் தொகையும் அரசினால் செலுத்தப்படும். கற்கைக் காலம் மற்றும் ஒருவருட சலுகைக் காலத்தின் பின்னர் கடன் தொகையினை மீளச் செலுத்த ஆரம்பிக்க வேண்டும்.

கடன் மீளச் செலுத்துகையானது, 4/3 வருட பாட நெறிகளுக்கான முழுக் கடன் தொகையானது 84/96 தவணைகளில் செலுத்தி முடிக்கப்பட வேண்டும்.

Interest free student loan