க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியாகியிருந்த நிலையில், மீண்டும் சாதாரண தரப் பரீட்சையை நடாத்த பரீட்சைகள் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தியொன்று பரவிக் கொண்டிருக்கிறது.
அண்மைய நாட்களில் இடம்பெற்ற பரீட்சை மோசடியே, இதற்கான முக்கிய காரணம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனபோதிலும், அவ்வாறு மீண்டும் பரீட்சை நடைபெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்று பரீட்சைகள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னரும் இவ்வாறான ஒரு பரீட்சை மோசடி இடம்பெற்றதாக சமூக வலைத்தளங்களில் வெளியான பொய்யான செய்தி தொடர்பில், சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.
எனவே, சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் தகவல்கள் துல்லியமான உண்மைத் தன்மையைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், பொய்யான வதந்திகளைப் பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.