அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்ற பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சையினை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு இலங்கை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான A.H.M.N.நவாஸ், விஜித் K. மலல்கொட மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.
பட்டதாரிகள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான பரிசீலனை நிறைவு செய்யப்படும் வரை ஆசிரியர் போட்டிப் பரீட்சையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இது தொடர்பில் 04 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. போட்டிப் பரீட்சை வர்த்தமானி அறிவித்தல் சட்டவிரோதமானது என்றும், இதற்கு அமைச்சரவை உரிய முறையில் தீர்மானங்களை மேற்கொள்ளவில்லை என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் வழங்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெற்றிடங்கள் காணப்பட்ட பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக உள்வாங்கப்பட்டிருந்தனர். எனினும், அவர்களுக்கு தனியாக ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டிருக்கவில்லை.
இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது கடந்த நாட்களாக பரிசீலனையில் இருந்த நிலையில், ஆசிரியர் போட்டிப்பரீட்சையை தற்காலிகமாக இடைநிறுத்த உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.