டிசம்பர் 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மீண்டும் சுனாமி ஏற்படும் என்று சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது.
இச்செய்தி முற்றிலும் பொய்யானது என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று தெளிவுப்படுத்தியுள்ளது.
சுனாமி அல்லது நில அதிர்ச்சி ஏற்படும் நேரம் மற்றும் திகதியை எவராலும் கணிக்க முடியாது என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சுனாமி அல்லது நில அதிர்ச்சி ஏற்படின், சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையங்கள் 24 மணி நேரமும் மிகக் கவனத்துடன் இருக்கும் என்றும், அது தொடர்பில் முன்கூட்டியே அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை உட்பட பல சர்வதேச நாடுகளைத் தாக்கிய சுனாமி, பௌர்ணமி நாள் அன்றே ஏற்பட்டது.
இதுதான் மீண்டும் மக்கள் அச்சப்படக் காரணம் என்று பணிப்பாளர் நாயகம் சுட்டிக் காட்டியுள்ளார்.
இருப்பினும் டிசம்பர் 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஓரளவு மழை பெய்யலாம் என்றும், இதனால் மக்கள் தேவையற்ற பயத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.