நாட்டின் பல மாவட்டங்களில் மோசமான காற்று தர வீழ்ச்சி
இன்று (டிசம்பர் – 08) காலை 09.00 மணி நிலவரப்படி, இலங்கையின் பல மாவட்டங்களில் காற்றின் தரமானது, மிகவும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) எச்சரிக்கை விடுத்துள்ளது.
காற்றுத் தரக் குறியீட்டில் (AQI) முறையே 114 மற்றும் 117 என பதிவாகியுள்ள கொழும்பு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கு “மெஜந்தா” (magenta) எனும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக NBRO அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் (81), முல்லைத்தீவு (80), தம்புள்ளை (84), கேகாலை (87) ஆகிய பகுதிகளில் காற்றின் தரமானது, ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது. இப்பகுதிகளுக்கு NBRO வால் “ஊதா” (purple) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புத்தளம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு “ஆரஞ்சு” (orange) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் காற்றுத் தர சுட்டெண்ணானது, 44 மற்றும் 43 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து வரும் மாசுபட்ட காற்றானது, இலங்கையின் வான்வெளிக்குள் நுழைந்துள்ளதாகவும், இதனால், இலங்கையின் வட பகுதி மற்றும் ஏனைய சில பகுதிகளில் காற்றின் தரமானது கடுமையான வீழ்ச்சியை எதிர்கொள்வதாகவும் NBRO கூறியுள்ளது. ஆகவே, மக்கள் சற்று எச்சரிக்கையாக இருப்பதுடன், காற்று மாசுபாட்டால் சுவாச பிரச்சினைகள் ஏதும் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.