பரீட்சையில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான ஒரு பதிவு!
பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்!
வெற்றி, தோல்வி என்பதைத் தாண்டி இப்பரீட்சை வெறும் ஒரு ஆரம்பப் புள்ளி மட்டுமே. இதில் சித்தியடைந்தவர்கள் மற்றும் தோல்வியடைந்தவர்கள் அனைவருக்குமே அருமையான எதிர்காலம் உள்ளது.
வெற்றிக்கு முதற் படி தோல்வி என்பதையும், எதிர்காலத்தில் தோல்வி அடைந்தவர்களால் தான், மாபெரும் வெற்றிகளைப் பெற முடியும் என்ற தன்னம்பிக்கையை முதலில் உங்களுக்குள் நீங்கள் விதைக்க வேண்டும்.
அதேநேரம், “தோல்வியை நாளையே வெற்றியாக மாற்ற முடியும்” என்ற தெளிவோடு தான் நாம் பரீட்சை முடிவுகளையும் எதிர்கொள்ள வேண்டும். வெற்றி, தோல்விகள் தற்காலிகமானவை. தோல்வி அடைவதனால் தான் வெற்றிக்கான வழி பிறக்கும்.
வரலாற்றில் தமது பெயர்களை பொன் எழுத்துக்களால் பொறித்துக் கொண்டவர்கள் எல்லோரும், அவர்களின் கடந்த காலங்களில் பெரும் பெரும் தோல்விகளைச் சந்தித்தவர்கள் தான் என்பதை ஒருமுறை மீட்டிப் பாருங்கள். அவர்களின் தோல்விக்கெதிரான எதிர்நீச்சல் தான், அவர்களை வாழ்க்கையில் மிகச் சிறந்த இடத்தில் வைத்துள்ளது.
தோல்வியைப் பற்றித் தோமஸ் அல்வா எடிசன் கூறுகின்ற போது, “வாழ்க்கையில் தோற்றவர்கள் பலர், அவர்களின் முயற்சியைக் கைவிட்டபோது, அவர்கள் வெற்றிக்கு எவ்வளவு நெருக்கமாக இருந்தார்கள் என்பதை உணராதவர்கள்” என்கின்றார்.
“வெற்றி என்பது இறுதியானது அல்ல, தோல்வி என்பது அபாயகரமானது அல்ல, தொடர்வதற்கான தைரியம்தான் முக்கியமானது” என்கின்றார் முன்னாள் இங்கிலாந்துப் பிரதமரும் உலகத் தலைவருமான வின்ஸ்டன் சர்ச்சில்.
ஆகவே மாணவர்களே, தோல்வி என்பது வெற்றியின் முதற்படி என்னும் பழமொழி பொய்யல்ல. ஒரு வெற்றியைப் பெற்றவர்கள், அந்தப் படிக்கட்டிலேயே அமர்ந்து விடுவார்கள். தோல்வியினால் அடுத்தடுத்த படிக்கட்டுகளை அடைந்து உச்சத்தை எட்டுபவர்கள் தான் அதிகமாக ஜெயிக்கிறார்கள்.
பரீட்சையில் தோற்றவர்கள் யாரும் வாழ்க்கையில் தோற்றதில்லை. பரீட்சையில் வென்றவர்கள் அனைவரும் வாழ்க்கையில் வென்றதும் இல்லை என்பதை ஒருபோதும் மறவாதீர்கள்.
எந்தத் தோல்வியும் நிரந்தரமல்ல. ஒரு கதவு மூடினால், அதனருகில் உள்ள மற்றொரு கதவை பலம் கொண்டு திறவுங்கள். நீங்கள் பயணிக்கும் பாதை உங்கள் லட்சியத்தை எட்டுவதாக இருக்கும்.
இறைவன் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு திறமையை வைத்தே படைத்திருக்கிறான். நீங்கள் உங்களுக்குள் உள்ள திறமையை வெளிக்கொணர்ந்து, இந்த உலகத்திற்கு உங்களை நிரூபித்துக் காட்டுங்கள். அர்ப்பணிப்பான உழைப்பின் மூலமே அதனைச் சாத்தியமாக்கலாம்.
ஆகவே நம் வாழ்க்கையை நாமே செப்பனிட வேண்டும். அதற்கான மனவலிமையையும், தன்னம்பிக்கையையும் வளர்க்க வேண்டும். அதற்கான திட்டமிடலை இப்போதே வகுக்க வேண்டும்.
வாழ்க்கையில் நிறைய பரீட்சைகள் வரும். அதில் தோல்வியும், வெற்றியும் மாறிமாறி வருவது இயல்பே. ஆகவே தோல்வியை நினைத்து சலிப்படையாமல், வெறுப்படையாமல் உங்கள் கனவை நோக்கிப் பயணித்துக் கொண்டே இருங்கள். உங்களுக்கான மிகப்பெரும் வெற்றி உங்களை நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறது.
பரந்து விரிந்து கிடக்கும் இப்பூவுலகில் உங்களுக்கு எல்லையே கிடையாது. உங்கள் சிறகுகளை விரித்துப் பறக்க ஆரம்பியுங்கள்.
“வெற்றி நிரந்தரமுமல்ல! தோல்வி இறுதியானதுமல்ல!”