படிக்கும் போது நீங்கள் பின்பற்ற வேண்டிய ஐந்து முக்கியமான விடயங்கள்
போட்டித் தேர்வு பொதுத் தேர்வுகளுக்குத் தயாராகின்றவர்கள் எப்படிப் படிக்க வேண்டும், படிக்கும்போது செய்ய வேண்டிய விஷயங்கள், செய்யக்கூடாத விஷயங்கள் என்று பல உள்ளன. அவற்றில் 05 முக்கியமான விஷயங்களை இந்தக் கட்டுரையில் உங்களுக்கு நாம் வழங்குகிறோம்.
திட்டமிடல் முக்கியம்
படிக்கும்போது எங்களுக்கு இஷ்டமான பாடங்களை மாத்திரம் படிக்கக்கூடாது. முதலில் எதைப் படிக்க வேண்டும், பிறகு எதைப் படிக்க வேண்டும் என்பது பற்றிய திட்டமிடல் இருக்க வேண்டும். பலர் சுலபமான பாடங்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்துக் கற்றுக் கொள்கின்றனர். ஆனால், கடைசியில் கடினமான பாடங்களை விட்டுவிடுகின்றனர். ஆகவே எல்லாப் பாடங்களையும் திட்டமிடலுடன் கற்றுக் கொள்வது மிக மிக அவசியமாகும். அத்துடன், திட்டமிட்டதையும் அடிக்கடி மாற்றக் கூடாது.
அன்றன்றே கற்றல்
எளிமையான பாடங்களைப் படிக்கும் போது, அதற்குக் கூடுதலான நேரம் எடுத்துக் கொள்ளக் கூடாது. அதேவேளை கடினமான பாடங்களைப் படிக்கும் போது அதற்குக் கூடுதல் நேரத்தை எடுத்துக்கொண்டாலும், அன்றன்றே படித்து முடிப்பது சிறந்தது. நாளை, நாளை என்று ஒருபோதும் காலம் தாழ்த்தக்கூடாது . ஏனெனில், நாம் காலம் தாழ்த்திக் கொண்டே இருந்தால், மொத்தமாக அவை சேர்ந்து விடும். எனவே சோம்பலுக்கு இடம் தராமல் அன்றன்றே கற்றுக் கொள்ளுங்கள்.
நிமோனிக்ஸ்
சிறுவயதில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் எத்தனை நாட்கள் உள்ளது என்பதைக் கணிப்பதற்கு, நாம் விரல் விட்டு எண்ணுவோம். இவ்வாறு கடினமாகத் தோன்றுவதை எளிதாக மனப்பாடம் செய்து கொள்வதற்கான முறையை
நிமோனிக்ஸ் என்று அழைப்போம். அதே போன்று, கணித பாடங்கள், அறிவியல் பாடங்களை ஏதேனும் ஒரு பொருளுடன், ஒரு வடிவத்துடன் ஒப்பிட்டு மனப்பாடம் செய்து கொள்ளலாம். பின்பு அதனை ஞாபகப்படுத்தும் போது அனைத்தும் எங்களுக்குத் தானாகவே ஞாபகம் வந்துவிடும்.
மன வரைபடம்
பொதுவாக நேர்த்தியானதை விட, வளைந்து நெளிந்து, ஒழுங்கற்றதாக, கலர் கலராக இருப்பதை இலகுவாக எமது மூளை பதிவு செய்து கொள்ளும். உதாரணமாக நேராக இருக்கும் சாலைகளை விட, வளைந்து காணப்படும் சாலைகள், மரங்கள், நதிகள் போன்றவற்றை ஒரு பிம்பமாகப் பதிவு செய்து கொள்ளும். அந்த வகையில், நீங்கள் படிப்பதையும் ஒரு மன வரைபடமாக உங்கள் மூளையில் பதிவு செய்து கொள்ளலாம். உதாரணமாக, சுதந்திரப் போராட்டம், பசுமைப் புரட்சி, ராக்கெட் ஏவுகணை என்பதாக வைத்துக் கொள்வோம். இதனை ஒரு கதையாக மாற்றி மன வரைபடமாகப் பதிவு செய்து கொள்ளல் வேண்டும். முடிந்தால் அதனை ஒரு தாளில் வரைபடமாக வரைந்து அதனைப் பார்த்துக் கொண்டால், இலகுவாக நமது மூளை கிரகித்துக் கொள்ளும்.
குறிப்புகள் எடுத்தல்
வீட்டில் படிக்கும்போதும், ஆசிரியர் பாடம் நடாத்தும் போதும் குறிப்புகள் எடுப்பது மிகவும் அவசியமாகும். கற்கும் போதும், கற்பிக்கின்ற போதும் மிக முக்கியமான விடயங்களை நாம் ஒரு தாளிலே குறிப்புகளாக எழுதிக் கொள்ளலாம். அதில் தேவையான மற்றும் முக்கியமான விஷயங்களை நாங்கள் தேர்வினில் எழுதிக் கொள்ளலாம்.