தற்போது நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, சில பகுதிகளில் மின்சார விநியோகத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், நாட்டின் பல பகுதிகளில் 150 மில்லிமீட்டர் வரை பலத்த மழை பெய்யலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இவ்வாறு பலத்த மழை பெய்யக்கூடுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என்று கொழும்பு மாவட்ட மீனவர்களுக்கு கடற்றொழில் திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது.
இதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (3) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தற்போதைய அனர்த்த நிலைமையினால் முற்றாக சேதமடைந்த அனைத்து வீடுகளையும் அரசாங்க செலவில் முப்படை மற்றும் பொலிஸாரின் உதவியுடன் இரு மாதங்களுக்குள் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன், அனர்த்தங்கள் தொடர்பான தகவல்களை அறிவிப்பதற்கும் தேவையான உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கும் 117 எனும் துரித அழைப்பு இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துமாறு இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
WhatsApp Group – Click here