இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்ற மாணவர் ஒருவர், மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைக்கப்பட்டதில் பலத்த காயமடைந்து தற்போது கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அம்பிட்டிய புனித பெனடிக்ட் கல்லூரியில் கற்கும் இந்த மாணவன், நவம்பர் 26 ஆம் திகதி இரவு, தனது பெறுபேற்றினைத் தனது பாட்டியிடம் தெரிவிப்பதற்காகச் சென்ற நேரத்தில் இவ்வாறான ஒரு அகோரமான சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.

அவருடைய தந்தையும் அருகில் இருக்கும் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த மாணவனை நோக்கி வந்த குறித்த நபர் ஒருவர் விளக்கெண்ணெயை அந்த மாணவன் மீது வீசி, தீயையும் கொளுத்தி விட்டுத் தப்பிச் சென்றதாக அந்த மாணவனுடைய தந்தை பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தீயில் அகப்பட்ட மாணவனின் கழுத்துப் பகுதி முற்றாக எரிந்துள்ளதுடன், அவருக்குத் தற்போது சத்திர சிகிச்சை ஒன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குறித்த நபர் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்றும் அவர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கு மூன்று போலீஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கண்டிப் மாவட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமில் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் அப்பிரதேசத்தில் அவ்வப்போது நடந்து வருவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தற்போது பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

WhatsApp GroupClick here