CORONA LATEST UPDATE (25.12.2023)
தற்போதைய தரவுகளின்படி, கொவிட் 19 வைரஸின் JN-1 துணை வகை காரணமாக, இலங்கையில் தொற்று நோய்க்கான ஆபத்து மிகக் குறைவு என்று சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கொரோனா மரணம் பதிவு (23.12.2023)
சுமார் ஒரு வருடத்திற்கு பின்னர் இலங்கையில் முதலாவது கொரோனா மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொவிட் அறிகுறிகளுடன் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கம்பளை ஹேத்கல பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.
PCR பரிசோதனையில் இவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்
அதேவேளை, நாட்டில் வாழும் மக்கள் மீண்டும் முகக்கவசம் அணியுமாறு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர அறிவுறுத்தியுள்ளார்.
JN 1 OMICRON உப பிறழ்வான புதிய கோவிட் வைரஸ் திரிபு இலங்கையிலும் பரவி வருகின்றமையே இதற்கான காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையிலும் புதிய வகை கொரோனா (17.12.2023)
இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள ஜே.என்-1 ஒமிக்ரோன் வகை புதிய கொரோனா வைரஸ் திரிபானது, தற்போது இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழக ஒவ்வாமை நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் ஆய்வுகூட தலைவர் சந்திம ஜீவந்திர தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கான சோதனைகள் தற்போது குறைந்தளவிலேயே முன்னெடுக்கப்படுவதன் காரணமாக, அதனுடைய உண்மையான தரவுகளைப் பெற முடியாதுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கொரோனா வைரஸுக்கு எதிரான நோயெதிர்ப்பு தடுப்பூசிகள் இன்னும் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆயினும், அதிக ஆபத்தை எதிர்நோக்கும் தரப்பினர், பூஸ்டர் (Booster) தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக, எவருக்கேனும் தொடர்ச்சியாகக் காய்ச்சல் காணப்படுமானால், அது தொடர்பில், மக்கள் மருத்துவரை அணுகி ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமது உத்தியோகப்பூர்வ எக்ஸ் (டுவிட்டர்) தளத்தில் இத்தகவலை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, புதிய வகை கொரோனா தொற்றான JN.1 சீனா, பிரேசில், ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகளில் அதிகம் பரவி வருகிறது.
சிங்கப்பூரில் டிசம்பர் மாதத்தில் தற்போது வரை சுமார் 56,000க்கும் அதிகமானோருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் JN1 கொரோனா வைரஸ் திரிபினால், தற்போது வரை 614 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.