How to Learn Other Languages Easily?
வேறு மொழிகளை இலகுவாகக் கற்றுக் கொள்வது எப்படி?
உலகெங்கிலும் உள்ள பலரும் பல்வேறு காரணங்களுக்காக, பல்வேறு மொழிகளைக் கற்றுக் கொள்கின்றார்கள். சிலர் தமது அறிவைப் பெருக்குவதற்காக, உயர் கல்விக்காக, உயர் பதவிகளைப் பெறுவதற்காக, ஏனைய நாடுகளுக்கு செல்வதற்காக, பல இன மக்களுடன் தொடர்பு கொள்வதற்காக போன்ற பல்வேறு காரணங்களுக்காக வேறு பல மொழிகளைக் கற்றுக் கொள்கின்றார்கள்.
மொழிகளைக் கற்பதற்கு ஒவ்வொருவருக்கும் கற்றுக்கொள்ள எடுத்துக் கொள்ளும் காலம் வித்தியாசப்படுகிறது. குறிப்பாக சிறு பிள்ளைகளைப் பொருத்தவரையில் அவர்கள் ஒரே சமயத்தில் இரண்டு மொழிகளைக் கூட விரைவாகக் கற்றுக் கொள்வார்கள். அதுவும் சாதாரணமாக காதால் கேட்டே, பேசுகின்றார்கள். ஆனால் பெரியோர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு சற்று காலம் தேவைப்படும்.
வேறு மொழிகளைக் கற்க, எந்த ஒரு மொழிக்கற்கை நெறியிலும் கட்டாயம் சேர வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதனை மொழியாளர்கள் தீவிரமாக நம்புகின்றார்கள். அதாவது கற்க விரும்பும் ஒருவர், அந்த மொழிச் சூழலில் சிறிது காலம் இருந்தால் அதனை இலகுவாகக் கற்றுக் கொள்ள முடியும் என்கின்றனர்.
ஒரு மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் முதலில், எங்களிடம் உந்துதல் இருந்தால் போதுமானது. அதுவே எங்களை மிக விரைவாகவும், இலகுவாகவும் கற்றுக் கொள்ள வைத்துவிடும். காலப்போக்கில் இது பொழுதுபோக்காகவும் வேடிக்கையாகவும் மாறிவிடும்.
மொழிகளை இலகுவாக கற்றுக் கொள்ள இதோ சிறந்த ஐடியாக்கள்
01. முதலில் பாடசாலைகளில், கல்லூரிகளில் வேறு மொழிகளை எவ்வளவு கடினத்துடன் கற்றுக் கொண்டோம் என்பதை மறந்து விடுங்கள். இது உங்களில் எதிர்மறையான சிந்தனைகளை ஏற்படுத்தலாம்.
02. ஒரு மொழியைக் கற்பதற்கு முன்னர், ஒரு சிறு பிள்ளையாகவே மாறி விடுங்கள். சிறு பிள்ளைகளைப் போல் பேசுகின்ற ஒவ்வொரு விடயங்களையும் கூர்ந்து அவதானியுங்கள்.
03. ஒவ்வொரு நாளும் உங்களுக்கு முடிந்த ஒரு ஐந்து சொற்களை அந்த மொழியில் தெரிந்து கொள்ளுங்கள்.
04. முதலில் எடுத்தவுடன் இலக்கணத்தினைப் படிக்க முயற்சிக்க வேண்டாம்.
05. நீங்கள் கற்கின்ற மொழியில் கதைகள், பாடல்களைக் கேளுங்கள். தற்போது யூடியூப் மற்றும் இணையத்தளங்களில் பல்வேறு காணொளிகள் காணப்படுகின்றன. அவற்றைக் கூர்ந்து அவதானியுங்கள்.
06. ஒவ்வொரு நாளும் குறித்த நேரம் அந்த மொழியில் உரையாடுங்கள். தற்போது சமூக வலைத்தளங்களில், உலகெங்கிலும் பல நண்பர்கள் இணைந்திருக்கிறார்கள். அவர்களுடன் நீங்கள் தொடர்பு கொள்வதன் மூலம் இலகுவாகக் கற்றுக் கொள்ள முடியும். அதேபோல் உங்கள் மொழியை அவர்கள் கற்றுக் கொள்வதற்கு நிச்சயம் விரும்புவார்கள்.
07. மொழிகள் தொடர்பில் தற்போது இணையத்தளங்களில் பல்வேறு பயிற்சிகள் காணப்படுகின்றன. அவற்றைச் செய்வதன் மூலம் உங்கள் மொழித் திறனை மேலும் விருத்தி செய்து கொள்ளலாம்.
08. கற்றுக் கொள்ளும் போது தவறு விடுங்கள். அதெல்லாம் ஒரு பிரச்சினையே கிடையாது. சிறு பிள்ளைகள் கூட தவறுகள் செய்வதன் மூலமே கற்றுக் கொள்கின்றன. ஆகவே தவறு விடுகின்ற போது வெட்கப்பட வேண்டாம். பயப்பட வேண்டாம். அதனை அடுத்த முறை உங்களால் திருத்திக் கொள்ள முடியுமானதாக இருக்கும்.
09. எப்போதும் உங்களுடன் ஒரு அகராதியை வைத்திருங்கள். அத்துடன் ஒரு Note book உங்களோடு வைத்திருங்கள். அதில் உங்களுக்குத் தெரியாத சொற்களைக் குறித்துக் கொள்ளுங்கள்.
10. அந்த மொழியில் வந்த திரைப்படங்கள், நாடகங்கள் போன்றவற்றைப் பாருங்கள். இதன் மூலம் அவர்கள் எப்படிப் பேசுகின்றார்கள், எப்படி உச்சரிக்கின்றார்கள் என்பதை இலகுவாக உங்களால் அறிந்து கொள்ள முடியும்.
11. தற்போது அதிகமான இலவச மொழிப் பாட நெறிகள் பல்வேறு நிறுவனங்களில், இணையத்தளங்களில் நடத்தப்படுகின்றன. அதில் கலந்து பயன் பெறுங்கள்.
12. மிகக் குறைந்த காலத்தில் தேர்ச்சி பெற வேண்டும் என்று நினைக்காதீர்கள். உங்கள் பயிற்சியின் செயல் திறனில் கவனம் செலுத்துங்கள். இதுவே உங்களை விரைவாகக் கற்றுக் கொள்ளச் செய்யும்.
13. அந்த மொழியில் வருகின்ற செய்திகள், சஞ்சிகைகளைப் படியுங்கள். கற்றுக்கொள்ளும் விடயங்களை தினமும் ஒரு தாளில் எழுதுங்கள். அதனை நன்கு உரத்து வாசியுங்கள்.
14. தொடர்ந்து தவறாது வகுப்புகளுக்கு செல்லுங்கள். ஆசிரியர்களிடம் உங்களுக்குத் தெரியாத விடயங்களை அன்றன்றே கேட்டு தெளிவு பெறுங்கள்.
15. ஒவ்வொரு நாளும் புதிய விடயங்களை கற்றுக் கொள்வதன் ஊடாக உங்களுடைய சொற்களஞ்சியத்தை நிரப்புங்கள். நிறைய சொற்களை நாம் உள் வாங்கினால், அதனை நம் நாவு இலகுவாக வெளிப்படுத்தும்.
சிலர் கூறுவார்கள், பெரியோர்களால் முதியோர்களால் மொழிகளை கற்றுக் கொள்வது சிரமமானது. ஆனால் அக்கூற்று தற்போது பொய்யாகியுள்ளது. இன்று உலகில் உள்ள பல முதியோர்கள் கூட இலகுவாக மொழிகளைக் கற்றுக் கொள்கின்றனர். ஆர்வத்துடன் கற்றுக் கொள்கின்றனர்.
நீங்கள் மொழிகளைக் கற்கின்ற பயணத்தில் நிச்சயம் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. சாதாரணமாக ஒரு மனிதன் இறக்கும் வரை அவனது மூளை தொடர்ந்தும் அனைத்து விடயங்களையும் உள்வாங்கிக் கொண்டே இருக்கும். ஆகவே ஒருபோதும் பின் வாங்கி விடாதீர்கள்.
நீங்கள் ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள விரும்புகின்றீர்கள் என்றால், அதனைப் பேசுவதை விட கேட்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். இது உங்களுக்கு ஆச்சரியமானதாகத் தோன்றலாம். ஆனால் இதுவே ஒரு மொழியைக் கற்பதற்கான மிகச் சிறந்த ஒரு படியாகும். இதற்கு சிறு பிள்ளைகள், குழந்தைகள் மிகச் சிறந்த உதாரணமாகும். குறிப்பாக, சொற்களை எவ்வாறு உச்சரிப்பது, அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி நாம் அனைத்தையும் அறிந்திருக்க முடியாது. ஆனால் அவற்றை நாங்கள் நன்கு செவிமடுத்துக் கேட்பதன் மூலம், அந்தத் திறனை எம்மால் இலகுவாக வளர்த்துக் கொள்ள முடியும்.
ஒரு மொழியைக் கற்றுக் கொள்ள சில முயற்சிகளும் அர்ப்பணிப்புகளும் நிச்சயம் தேவை. நம்பிக்கை, மன உறுதி, தைரியம் இவற்றை எப்போதும் உங்களுடன் பேணிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் ஒரு அடியை எடுத்து முன் செல்லுங்கள். ஒருநாள் அந்த மொழியை நீங்கள் சரளமாகப் பேச முடியும். எங்கள் ஆலோசனைகள் நிச்சயம் உங்களுக்குப் பயனுள்ளவையாக அமைந்திருக்கும் என்று நம்புகின்றோம். மொழியை கற்றுக் கொள்ளும் உங்கள் பயணத்துக்கு எங்களது வாழ்த்துக்கள்.