Free Session (Media Course)

IREX நிறுவனம் இலவசமாக நடத்தும் ஊடக பயிற்சிப் பட்டறை

 

IREX free session

 

மொழி மூலம்: தமிழ்

கட்டணம்: இலவசம்

காலம்: நான்கு நாட்கள்

(நாளொன்றுக்கு ஒன்றரை மணி நேரம்)

யார் கலந்து கொள்ளலாம்?

  • பாடசாலை மாணவர்கள்
  • பல்கலைக்கழக மாணவர்கள்
  • தொழில் புரிபவர்கள் மற்றும் ஆர்வம் உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்.

இப் பயிற்சிப் பட்டறை முழுவதும் ZOOM மூலமாகவே நடாத்தப்படும். இதில் ஊடகவியல் தொடர்பான அடிப்படை அறிவு, சமூக ஊடகங்களை எவ்வாறு கையாள்வது, பகிரப்படும் தகவல்களை எந்தக் கோணத்தில் பார்ப்பது போன்ற பல்வேறு விடயங்கள் இப் பயிற்சிப் பட்டறையில் பயிற்றுவிக்கப்படுகின்றது. பயிற்சிப் பட்டறையை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு பெறுமதிமிக்க சான்றிதழ் மற்றும் டேட்டா கொடுப்பனவு வழங்கப்படும்.

விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.

(விண்ணப்பம் முடிந்தது)

 

சமூக ஊடகங்கள் வரமா? சாபமா?

இலங்கையில் தற்போது ஊடகங்கள் பெரும் செல்வாக்கு மிக்கவையாக மாறி வருகின்றன. அதிலும் குறிப்பாக சமூக ஊடகங்களின் பாவனையும் பகிர்வும் மிகவும் அதிகரித்து வருகின்றது.

இன்று சமூக ஊடகங்களாக முகப்புத்தகம் (Facebook), வாட்ஸ் அப் (WhatsApp), YouTube, Twitter, Telegram, Instagram போன்ற பல தளங்கள் காணப்படுகின்றன.

இன்று பலரும் பல மணி நேரங்களை சமூக ஊடகங்களில் செலவழித்து வருகின்றனர். பல்வேறு பதிவுகள், பகிர்வுகள் என்று காலம் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக இளம் சமூகத்தினர் சமூக ஊடகங்களில் அதிகமாகவே நேரம் செலவழிக்கின்றனர். ஆகவே ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் தாக்கம் பற்றி அவர்களும், அனைவரும் அறிய வேண்டியது காலத்தின் தேவையாக இருந்து கொண்டிருக்கின்றது.

தற்போது சமூக ஊடகங்கள் விவாதங்களுக்கும், அரட்டைகளுக்கும் பல்வேறு தளங்களை அமைத்துக் கொடுத்திருக்கின்றன. இவற்றின் வாயிலாக எங்களது கருத்துக்களை, பதிவுகளை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள முடியும். அதற்கான விமர்சனங்கள், கருத்துக்களைக் கூட மற்றவர்களிடமிருந்து தெரிந்து கொள்ள முடியும். சமூக ஊடகங்களின் வருகைக்குப் பின்னர் ஒவ்வொருவரும் தம்மை ஒரு ஊடகவியலாளராகவே மாற்றிக் கொண்டு விட்டார்கள் என்று கூறலாம்.

உலகில் நடைபெறும் ஒவ்வொரு விடயமும் இன்று சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. ஆகவே, எந்த இடத்தில் எது நடந்தாலும் அது உடனுக்குடன் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகின்றது.

கல்வி, அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம், விளையாட்டு என பல்வேறு துறைகளையும் மாற்றும் வல்லமையை சமூக ஊடகங்கள் கொண்டிருக்கின்றன. கடந்த காலங்களிலும், தற்போதைய காலத்திலும் ஒரு நாட்டினுடைய அரசியலையும் ஜனாதிபதியையும் தீர்மானிக்கக்கூடிய சக்தியை சமூக ஊடகங்கள் வெளிப்படுத்தி இருக்கின்றன. ஒருவருடைய திறமையை வெளிப்படுத்துவதற்கு அது மிகப் பெரிய ஒரு களத்தை அமைத்துக் கொடுக்கின்றது.

உலகில் உள்ள பலருடனும் சமூக ஊடகங்கள் ஊடாக வெகு விரைவாக தொடர்பு கொள்ள முடிகின்றது. பலருடனும் நட்புக் கொள்ள முடிகின்றது. நாம் நினைக்கின்ற, எண்ணுகின்ற எல்லா விடயங்களையும் அதில் பகிர்ந்து கொள்ள முடிகின்றது.

இருப்பினும், எவ்வளவுதான் சமூக ஊடகங்களில் நன்மைகள் இருந்தாலும், அதே போன்று தீமைகளும் இருக்கவே செய்கின்றன. அதனை இளம் சமூகம் புரிந்து கொள்ளுமாக இருந்தால் தான், அவற்றைத் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம்.

மக்களோடு மிகவும் நெருக்கமாக இருக்கும் சமூக ஊடகங்கள் தற்போது சில ஆபத்துகளுக்கும் வழி வகுக்கின்றன. உதாரணமாக சிலரினால் பகிரப்படும் போலிச் செய்திகள், வதந்திகள் போன்றவை பல்வேறுபட்ட ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக மாறிவிடுகின்றது. அண்மைக்காலங்களில் இவ்வாறான எவ்வளவோ விடயங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

இது தொடர்பான பல புகார்கள் சமூக ஊடக நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அந்நிறுவனங்கள் பல முக்கிய தீர்மானங்களை மேற்கொண்டு வருகின்றன.

குறிப்பாக, இன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்ற சில தகவல்களின் உண்மைத் தன்மையை ஆராயாமல் பலரும் விரைவாக பகிர்ந்து விடுகின்றமை வேதனைக்குரிய ஒரு விடயமாகும். பெரும்பாலான பதிவுகள் உண்மையாக இருக்கின்றன. ஆனால் சில போலியான தகவல்களும் பதிவுகளும் பரப்பப்பட்டு விடுகின்றன. ஆகவே இதில் நாங்கள் எவ்வாறு விழித்துக் கொள்ளப் போகிறோம் என்பது பற்றி சற்று அவதானம் செலுத்த வேண்டும்.

எமக்குக் கிடைக்கும் ஒரு செய்தியை நாங்கள் எந்தக் கோணத்தில் பார்க்க வேண்டும், அது உண்மையானதா என்று எவ்வாறு நிச்சயப்படுத்திக் கொள்வது போன்ற விடயங்கள் IREX நிறுவனம் வழங்குகின்ற பயிற்சிப் பட்டறையில் நீங்கள் முழுவதுமாக அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

சமூக ஊடகங்களில் முகம் தெரியாத நண்பர்களுடன் மிக விரைவாகப் பேசி நண்பர்களாக ஆகிவிட முடியும். இதில் சில நேரங்களில் நல்ல நண்பர்கள் சிலர் கிடைத்தாலும் பல பிரச்சினைகளுக்கும் இது வழி வகுக்கலாம். உங்களைப் பற்றிய மிக முக்கியமான எந்த ஒரு தனிப்பட்ட தகவல்களையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

ஒரு நபர் சமூக ஊடகத்திலே தன்னைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டி இருந்தால், Settings பகுதிக்குச் சென்று அது யாருடன் பகிரப்படுகிறது, அதனை யாரெல்லாம் பார்ப்பார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். அத்துடன் சமூக ஊடகங்களில் பழகும் பலரும் நாம் நேரில் பழகுகின்றவர்களாக இருக்க அவசியம் இல்லை‌. அதனால் நீங்கள் பகிர்ந்து கொள்ளும் ஏனையவர்களின் பதிவுகளின் உண்மைத் தன்மையை சற்று நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் நீங்கள் யார் என்பது உங்களுடைய பதிவுகளை வைத்தே தீர்மானிக்கப்படும். உண்மையான தகவல்களை மாத்திரம் பதிவிடுங்கள். போலியான, வதந்திகளை, நீங்கள் அறியாத விடயங்களை பதிவிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். பதிவுகளைப் பகிரும் போது மிகுந்த கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்.

அதேபோல் சிலர் செய்கின்ற அன்றாட விடயங்கள் அனைத்தையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்வர். தனிப்பட்ட வாழ்க்கையிலே நடக்கும் அத்தனை விஷயங்களையும் நாங்கள் சமூக ஊடகங்களில் பகிர வேண்டிய அவசியம் இல்லை. அது சமூகத்தில் தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. ஆகவே பகிரும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து கொள்ளுங்கள்.

இது எவ்வாறு இருப்பினும் சமூக ஊடகங்களில் தீமைகளைப் போன்றே நன்மைகளும் உள்ளன. தீமைகளைக் கண்டு முற்றிலும் நாங்கள் அகன்று சென்று விடவும் முடியாது. ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல நன்மையும் தீமையும் நிச்சயம் இருக்கும். ஆகவே, அதை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றோம் என்பதில் தான் எல்லாம் இருக்கின்றது என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பாலையும், நீரையும் பிரித்தறியும் அன்னமாக எப்போதும் இருங்கள்.

சமூக ஊடகங்கள் அவரவர் பயன்படுத்தும் விதத்தினை பொறுத்து, அதன் ஆதிக்க விளைவுகளைக் கண்டு கொள்ளலாம். எனவே இவற்றை பயன்படுத்தும் போது எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *