கிழக்கு மாகாணத்தில் உள்ள 3,500க்கு மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நிதி அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர (Jayantha Lal Ratnasekera) தெரிவித்துள்ளார்.
மேலும் அனுமதி கிடைத்த பின்னர் குறித்த வெற்றிடங்களுக்கு வேலையற்ற பட்டதாரிகளை போட்டிப் பரீட்சை மூலம் தெரிவு செய்து நியமிக்க திட்டமிட்டுள்ளோம் என ஆளுநர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மட்டக்களப்பு பழைய கச்சேரியில் இன்று (13) ஆளுநருடன் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் அவரை சந்தித்து ஜனாதிபதியிடம் வழங்குமாறு அரச நியமனம் கோரிய மகஜர் ஓன்றை ஆளுநரிடம் கையளித்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த ஆளுநர், “விஷேடமாக கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல நாடு பூராகவும் வேலையில்லா பட்டதாரிகள் இருக்கின்றனர். அதேவேளை நிதி அமைச்சர் அனுமதியளித்த 375 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கியுள்ளோம்.
எனவே பகுதி பகுதியாக அனைவருக்கும் நியமனங்களை அவசரமாக வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். உங்களுடைய கோரிக்கை அடங்கிய மகஜரை ஜனாதிபதியிடம் கையளிப்போம்” எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
Join Our WhatsApp Group – Click here